Pages

Wednesday, 21 September 2011

காடெல்லாம் பூத்திருக்கு (14) !


         

முதுமையென தள்ளாதே !  பாச மனத்தைக் கிள்ளாதே !
                                                                                                 


  " பாக்கியம் வெந்நீர் போட்டுத் தர்றியா குளிக்க? ஒரே குளிரா இருக்கு, பச்சத் தண்ணீர்லே  குளிக்க முடியாது போல இருக்கு" என தன் மனைவியிடம் கேட்டுக் கொண்டார் வேலுப்பிள்ளை. 



           "இதோ , போட்டுத் தறேங்க " என்றதோடு ஹீட்டர் சுவிட்சையும் போட்டாள். சிறிது நேரமே ஆகியிருக்கும். மகனை பள்ளிக் கூடத்துக்கு கீழே போய் அனுப்பி விட்டு வந்த வசந்தி " என்னம்மா, சாப்பாடு கட்டிட்டீங்களா? நேரமாகுது " எனத் தன் மாமியாரிடம் கேட்டு விட்டு பாத்ரூம் போகப் போனவள் ஹீட்டர் பல்பு எரிவதைப் பார்த்தவுடன் ஒரே படபடப்பாக " கரண்ட் என்ன ஒசில வருதா?  ஆயிரத்துக்கும் மேலே பில் ஆகுது" என சத்தம் போடுவதைப் பார்த்து " இல்லம்மா , "மாமா வெந்நீர் கேட்டாரு, அதான் போட்டேன், கொஞ்ச நேரம் ஓடட்டும் , பிறகு நானே ஆப் செய்றேன் " என்றாள்.



           " ஏன் நல்லா வெயில் வந்ததும் குளிக்கலாம் இல்லையா? எந்த ஆபீசுக்கு போகப் போறாரு? எல்லாரும் கொஞ்சம் சிக்கனமா இருந்தா நல்லது " எனக் குத்தி விட்டுச் சென்றாள்.  தன் கணவர் காதில் விழுந்து பாவம் வருத்தப்படப் போறாரே என கவலையுடன் எட்டிப் பார்த்தவள் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் பேப்பர் படிப்பதை பார்த்து பெருமூச்சி விட்டவளாய் நகர்ந்தாள் சமயலறைக்கு. 



           சின்ன சம்படத்தில் சாதம் சிறிய கிண்ணத்தில் பொரியல் , குட்டியூண்டு பாட்டில்களில் ரசம், தயிர் என ஊற்றி பக்குவமாய் அழகான பையில் இட்டு மேசைமேல் வைத்தாள். குளியல் முடித்து வந்த வசந்தி " அம்மா, நேத்து ஊறுகாய் வைக்க மறந்துடீங்க . அதையும் சின்ன கிண்ணமா பார்த்து வையுங்க " என்றாள். இது அன்பா ? ஆணையா? புரியவில்லை. ஒருவழியாக ஆபிசுக்கு கிளம்பி விட்டான். " அப்பாடா, இனி அவருக்கு சூடா தோசை வார்க்க வேண்டும்.


           என்னங்க , குளிச்சிட்டு வர்றீங்களா ?" தன் அயர்வை வெளிக்காட்டாமல் அழைத்தாள். " இதோ, வர்றேம்மா " என்றவர் அருகில் வந்து " பாக்கியம் , போன வருஷம் மாமா பச்சத் தண்ணியிலே குளிக்க கஷ்டபடுவார் ஹீட்டர் ஒன்னு வாங்கணும் என புருஷன் கிட்ட சொல்லி வாங்கினா. ஒரு  வருஷம் கழிச்சு இப்ப வெயில் வந்தா குளிக்கலாமேன்னு அட்வைஸ் குடுக்குறாளே ?" என்றவரைப் பார்த்து " கேட்டுட்டு தான் இருந்தீங்களா? நீங்க பேப்பர் படிக்கிறீங்கன்னு பார்த்தேன் " என்றாள்.  பேப்பர் படிச்சா எதுவுமே தெரியாதா? உட்காந்த இடத்திலே இருந்துகிட்டே அவ்வளவு பெரிய குடோனை நிர்வாகம் பண்ணினவனாக்கும். எனக்கு சுடு தண்ணி வேண்டாம். பச்சத் தண்ணியிலே குளிச்சிக்குறேன்" என்றாள் பாக்கியம் " வேண்டாங்க" என்றதையும் கேட்காமல் மளமளவென தண்ணீரை ஊற்றிக் குளித்தார். 

           பாக்கியத்தம்மாள் சூடா ரெண்டு தோசை வார்த்து தட்டில் வைத்தாள். தொட்டுக்கொள்ள காலையில் வைத்த காரைகுளம்பு. தட்டின் முன்னாள் உட்க்காந்தவர்  "கொஞ்சம் சட்னி போடும்மா" என்றார். " தேங்காய் கொஞ்சம் தான் இருந்தது. பிள்ளைகள் வரை சரியா போச்சு" என்றாள் . "சரி, உன் கை பக்குவம் சட்னி நல்லா இருக்குமேன்னு கேட்டேன் " என்றவர், " நீயும் தோசை எடுத்துகிட்டு வா" என்றார். " இல்லீங்க, நீங்க சாப்பிடுங்க, நான் சாதம் போட்டுகிறேன்" என்றாள். "சரி , சீக்கிரம் புறப்படு, கோவிலுக்கு போயிட்டு வரலாம்" என்றவரிடம், " துணி கிடக்கு, மிஷின்லே போடணும்" என்றாள். " சரி, நான் போயிட்டு வர்றேன் " என்றார்.

           கோவிலில் கூட்டம், சாமி தரிசனத்துக்கும் கூட்டம் அதிகமாய் தான் இருக்கு என மனதுக்குள் எண்ணியவராய் ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்தார். வெளியில் அமைதியாய் இருந்தாலும் மனம் அமைதி இன்றியே இருந்தது. ஓடி ஓடி உழைத்து சிறுகச் சிறுகச் சேர்த்து வாழ வசதியாய் வீடும், பிள்ளைகள் திருமணத்தையும் செய்து முடித்து எஞ்சியுள்ள காலத்தை நிம்மதியாய் கழிக்கலாம் என்றால் முடியவில்லையே! வீட்டை மகனுக்கு எழுதிக் கொடுக்கும் வரை தாங்கியவர்கள் பத்திரம் மாறியதும் மாறிவிட்டார்களே. பாவம் பாக்கியம் , அந்தக் காலத்து மனுஷி. அவளுக்கு வெளுத்ததெல்லாம் பால். பிடியரிசி சேர்த்து அதில் ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவாள். சிறுகச் சேர்ப்பதில் கெட்டிக்காரி. பிடியரிசியை அளந்து கொண்டிருப்பதைப் பார்த்த வசந்தி " ஏம்மா, கடையிலே கொடுக்கவா?" என்றாள். ' கடைக்கா? எதுக்குமா?' என்ற பாக்கியத்தைப் பார்த்து ' கடையிலே குடுத்தா காசு கிடைக்கும்ல. சேர்த்து வைக்க' என்றாள்.' அம்மா இது பிடியரிசி, ஏழை பிள்ளைகளுக்கு ஒரு நாள் சமைச்சுப் போடலாம்' என்றாள். ' பிடியரிசி என்ற பேரிலே படிப்படியா அரிசி குறையுது' என்றாள். என்னால் கோபத்தை அடக்க முடியாமல் ' இதோ பாரும்மா , நாவை அடக்கிப் பேசு, யாரைப் பார்த்து பேசுற? உங்களுக்கெல்லாம் சிறுகச் சிறுகச் சேர்க்கத் தெரியாது. மொத்தமா டிவியிலே நடத்துகிற போட்டியிலே பணம் கிடைக்காதா, பங்கு சந்தையிலே மொத்தமா பணம் கிடைக்குமான்னு உழைக்காத காசுக்கு ஆசை படாம உழைப்பிலே மிச்சம் பண்ணி சேர்க்கிறவங்க, ரொம்பப் பேசின நடக்கிறதே வேற ' எனச் சாடினார். 

           அதன் பின் மருமகளோடு பேச்சே கிடையாது. என் வீட்டுக்காரி தான் பாவம் மகனையும் விட்டுக்குடுக்க முடியாமல் , மருமகளுக்கிட்டயும் பணிஞ்சி நடந்துகுறா. நான் கோபப்படுறதாலே என்னை முதியோர் இல்லத்திலும் அவளைத் தன் வீட்டில் வைத்து கொள்வதாகவும் பேச்சு அடிபடுது. தனியாரிடம் வேலை பார்த்ததால் வேலையை விட்ட பின் ஓய்வூதியம் கிடையாது. உழைத்தபோது சேர்த்ததை எல்லாம்  பெற்ற கடனுக்குக் கொடுத்தாச்சு. பாக்கியம் பேருக்கு ஐம்பதாயிரம் போஸ்ட்டாபிசில் இருக்கு. அதை யாருக்கும் தரலை. எங்கள் பாதுகாப்புக்கு அது தான் உதவும் என்று எண்ணிக் கொண்டு நேரம் போனதே தெரியாமலிருந்து விட்டேன் கோவிலில். 

           இத்தனை நேரம் என்னைக் காணாமல் பாக்கியம் தேடும் என்று எண்ணி வீட்டுக்கு நடை போட்டேன். பாக்கியத்தின் முகம் வெகுவாக மாறியிருந்தது. வேலைக்குப் போனா மருமகளும் வீட்டிலிருந்தாள். காரணம் தெரியவில்லை. அவகிட்டே காரணம் கேட்டேன். ஒன்றும் சொல்லவில்லை. சரி, இது சரிப்படாது என வெளியே கிளம்பினேன். வீட்டை விட்டு வெகுதூரம் தள்ளி சின்னதாக ஒரு வீடு பார்த்தேன். கையிலிருந்ததை எடுத்து முன் பணமாக கட்டினேன். ஒரு வாரத்தில் போஸ்ட் ஆபீசிலிருந்து பணத்தை எடுத்து சில சாமான்கள் வாங்கி சிறிய வீட்டில் தனிக் குடித்தனம். இருவரும் பேசி வீட்டிலிருந்த படியே பாக்கியம் இட்லி சுட்டு அருமையான சாம்பார் சட்னி வைத்து வியாபாரம் தொடங்கினோம். கேட்பவர்களுக்கு பார்சல் பண்ணிக் குடுப்பது என் வேலை. நிறைய லாபம் எதிர்பார்க்கவில்லை. நாளாக நாளாக எங்கள் வீட்டு இட்லிக்கு நல்ல வரவேற்பு. எங்களின் தினச் செலவுகள் கழிந்தன. நானும் வேலைகளைப் பகிர்ந்து கொண்டதால் பாக்கியத்துக்கும் வேலைப் பளு குறைந்தது. எங்களுக்கென்று அண்டை வீடுகளில் சிலர் சொந்தங்களாகினார்கள்.  சுற்றிப் பல பேரன், பேத்திகள், முதியவர்கள் முயலும் போது தள்ளாத வயதில் கூட தனித்து நிற்க முடியும். எங்கள் குடும்ப விவரங்களை மட்டும் யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் பிள்ளைகள்மேல் நம்பிக்கை குறையக் கூடாது என்பதால், கடவுள் கொடுத்த காலம் வரை குறைவின்றி நிறைவோடு வாழ எங்களுக்கும் முடிவதால் பரம திருப்தியோடு நாட்கள் நகர்கின்றன. 

இளமையோடு இருக்கும் முதுமையே !

கீழ்வானிலிருந்து  எழும் சூரியன்
மாலைக்குள் மொட்டவிழும் மல்லிகை, 
நீருக்குள் தலை நிமிர்ந்து பூக்கும் தாமரை 
எல்லாமே இளமையும் புதுமையுமாய்,
எனக்கும் உனக்கும் இன்பம் தருதே
குறுத்தோலையாய் இருந்த பழுத்தோலைகள்   
சேதி பல சொல்லுதே தெரியுமா ?

இளமையும் முதுமையும் மாறிவரும்
எனக்கும் பின்னால் உனக்கும்.
நாளை நமக்கென்ன நிகழும். 
எண்ணிப் பார்ப்பதே நலமெனக்
கொண்டால் முதுமை இனிக்கும்.
முற்றிய மாங்கனியாய், கொட்டும் 
தேன் சுவையாய் இளமையே நீ வாழ்க !
                                                                                அன்புடன்  புஷ்பம் அமல்ராஜ்
           

7 comments:

  1. vanakkam amma.. nice story..muthumai parum.. nammakkum varum pinnal.இளமையும் முதுமையும் மாறிவரும்
    எனக்கும் பின்னால் உனக்கும்.
    நாளை நமக்கென்ன நிகழும். superb lines..

    ReplyDelete
  2. I read the story and kavithai three times. So nice, so touching...
    Everyone should realize the importance of elder people and treat them with care and respect.

    Hats off for a very nice presentation.

    ReplyDelete
  3. I forgot to say one more thing, I really like the picture with idly and chutney

    ReplyDelete
  4. ALL CREDIT GOES TO BABUANNA.....nice to read the story and gud picture selection.....handsoff to the author for wonderful poem..........advances birthday wishes to my sweet periyamma............

    ReplyDelete
  5. மாறும் வாழ்க்கை சுழலில்
    மாறாத அன்பை தந்த
    மாதா பிதாவை மறந்தும் மறக்காதே !

    nice theme

    ReplyDelete
  6. சின்ன குழந்தைகளுக்கு
    கதை சொன்ன நான்
    முதுமையில் இளமைக்கு
    கதை சொல்ல வந்தேன்
    விமர்சனம் என்ற பெயரில்
    என் எழுத்தை ஏற்று
    பாச புதையலை அள்ளித்
    தந்த அன்பு கண்மணிகளுக்கு
    இந்த காட்டில் பூக்கும் அனைத்து
    கதைகளும் சமர்ப்பணம்
    என்றும் அன்புடன் ,
    புஷ்பம் அமல்ராஜ்

    ReplyDelete