வருந்தாதே! இது முடிவல்ல,
வாணி இரவெல்லாம் உறங்காமல் மருத்துவமனையில் கலையரசன் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள். கலை உயிருடன் திரும்புவானா? என்னை ஏமாற்றி விடுவானா? கண் விழிப்பானா? ஏதேதோ எண்ணங்கள் கடலில் அடிக்கும் அலையாய் மாறிமாறி வந்து கொண்டேயிருந்தது. காலையில் நடந்த சம்பவங்கள் தொடராய் நினைவில் அழுத்த கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் கொட்டிக் கொண்டிருந்தது. அவ்வப்போது நர்ஸ்கள் மாறிமாறி மருந்துகளை நரம்பில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கலை கண் விழிப்பானா? காத்திருக்கிறேன்.
கல்லூரி நாட்களில் தைரியமானவன், தன்னம்பிக்கை உள்ளவன் என்றெல்லாம் நண்பர்களால் பேசப் பட்டவன். எந்தப் பிரச்சனையானாலும் தீர்க்கமான முடிவெடுத்து சிக்கலில்லாமல் முடிக்கக் கூடியவன். சோதனை அவனை நெருங்கிய போது கூட கலங்காமல் எதிர் கொண்டவன். அப்படிப்பட்டவன் எப்படி? ஜீரணிக்க முடிய வில்லை. நானும், அவனும் பழகிய ஆறு ஆண்டுகள் இப்படி சோர்ந்து சோகமானவன் இல்லை.
கல்லூரி முதல் ஆண்டு சேர்ந்த போது , என் வகுப்புத் தோழனாய் அறிமுகமானவன். கலை நிகழ்ச்சி ஒன்றில் நாங்களிருவரும் போட்டி போட்டு படித்த கவிதையில் பரிசு எனக்கே கிடைத்த போது மிக உற்சாகமாய் என்னை பாராட்டியதோடு அடுத்து நான் எழுதிய கவிதைகளுக்கு அவனே முழு முதற்க் காரணமானான். நான்கு ஆண்டுகள் பிரிக்க முடியா அன்பிலும், நட்பிலும் கழிந்தது. இன்று நினைத்தாலும் அந்த நாட்கள் திரும்பாதா என்ற ஏக்கம் கொள்ளச் செய்கிறது. எங்களைச் சுற்றியிருந்த நண்பர்கள் எங்களுக்கு துணையாக பக்க பலமாக எங்கள் மகிழ்ச்சியில் - கவலையில் - படிக்கும் வேளையில் என பல நிலையிலும் துணை நின்றார்கள். கல்லூரி நாட்கள் கடந்த பின் பொறுப்புள்ள பிள்ளைகளாய் வேலை தேட விண்ணப்பங்கள் போட என இருவருக்கும் பொழுது வெகு வேகமாய் சென்று கொண்டிருந்தது.
எங்கள் வீட்டை பொறுத்த அளவில் நான் ஒரே பெண் . கல்லூரி படிப்பு முடித்ததுமே வரன் தேடுவதைச் சொன்ன பெற்றோரிடம் இரண்டு வருடம் வேலைப் பார்த்து சம்பாதித்த பின் தான் திருமணம் என தீர்மானமாக சொன்னதால், மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார்கள். கலை வீட்டில் இரு தங்கை , தம்பி , அப்பாவின் ஒற்றை வருமானம், கலையை நம்பித்தான் குடும்பம் இருந்தது. நல்ல வேலை கிடைக்கவேண்டும் என விரும்புவது அவனுக்கு மட்டுமல்ல அவனது குடும்பத்தினரின் கனவாகவும் இருந்தது. ஆறு மாத அயராத முயற்சிக்குப் பின் வேலைக் கிடைத்தது. நானும் ஒரு வேலையை பார்த்து கொண்டிருந்தேன். தினமும் சந்திப்போம். வேலை, வீடு , நண்பர்கள் என பல விசயங்களை பற்றியும் பேசுவோம். இன்பமாகக் கழிந்த நாட்களில் இதுவும் ஒன்றானது. கலை திறமையானவன் மட்டும் அல்ல நேர்மையானவனும் கூட, யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பான். இன்றும் அப்படித்தான் அவனது அலுவலகத்தில் மேனேஜர் சொன்ன வேலையிலிருந்த தவறைச் சுட்டிக் காட்டியதால் இருவருக்கும் வாக்கு வாதம். அவர் சொன்னபடி செய்தால் பெரிய தொகை அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அது கம்பெனிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும். இதை மனதில் கொண்டு பலவகையிலும் அவனை குறை சொல்லத் தொடங்கிய போது மனம் நொந்து போனான்.
எனது ஆறுதல் வார்த்தைகள் அவனை சமாதானம் செய்ய வில்லை. அவனது அந்த நிலை என்னை மிகவும் பாதித்தது. எனவே நாம் இருவரும் சேர்ந்து சிறிய அளவில் கன்சல்டன்ஸி வைக்கலாமென முடிவு செய்தோம். அதற்கான மூலதனத்திர்க்காக பல பேரைச் சந்தித்து நிதி சேர்த்து, பேங்கில் இருவரும் கூட்டாக லோன் போட்டு , நண்பர்கள் ஆலோசனை, பல உதவிகள் என பெற்று ஆறு மாத அலைச்சலுக்குப் பின் நல்லதொரு இடத்தில் தொடங்கினோம். புதிய தொழில் , புதிய மனிதர்களின் சந்திப்பு , உழைப்பு- கடுமையான உழைப்பு இருவரும் அருகருகே தான் இருந்தோம். ஆனாலும் வேலை விசயமில்லாமல் வேறு பேச்சே கிடையாது. இருவரும் சோர்ந்து போகும் அளவு உழைத்து காப்பி சாப்பிடுவதோடு வீடு செல்வோம்.
வீட்டில் படுத்தவுடன் கடந்த கால சந்தோசமான நிகழ்வுகள், பேச்சு , அரட்டை, விளையாட்டு , கவிதை எழுதிய நேரங்கள் , அன்பான தட்ட, கொட்டல் எல்லாம் நினைவில் வந்து சந்தோசப் படுத்தும். தற்போது போகும் பொழுதுகள் சங்கடமாகத் தான் தோன்றும் என்றாலும் எங்கள் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவே இந்த உழைப்பு என எண்ணும் போது கஷ்டங்கள் மறந்து போகும்.
எங்களின் கூட்டு முயற்ச்சிக்கு பலன் கிடைத்த போது மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றோம். என்னைத் தன அன்பென்ற மழையில் நனையச் செய்த கலையின் பேச்சை , செயல்களை ரசித்தேன். தன் அன்பின் வெளிப்பாடாக மோதிரம் ஒன்றை அணிவித்தபோது பட்ட கஷ்டமெல்லாம் மறக்க செய்தது.
அவரது வீட்டுக்கு போய் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். அம்மாவும் ,அப்பாவும் என்னைப் பாராட்டினார்கள். எங்களை வாழ்த்தினார்கள். அன்றைய நாள் மிகவும் சந்தோசமாய் கழிந்தது. எங்கள் வீட்டிலும் எங்களின் தொழில் வெற்றிகரமாய் அமைந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். காலம் நொடியை ஆண்டுகளாக்கியது. இரு தங்கைகளின் திருமணமும் முடிந்தது. எங்களின் திருமணம் பற்றி கேட்ட போது வீடும், காரும் வாங்கியபின் முடிக்கலாம் என்றார்கள்.
எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாய் காத்திருந்தும் கலையிடமிருந்து பதில் இல்லாததால் மாப்பிள்ளை தேடுவதில் ஈடுபட்டார்கள். உன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தோம் இனி முடியாது என்றார்கள். அவர்கள் வீட்டில் வாக்குவாதம் , போராட்டம் இரண்டு ஆண்டுகள் ஆகட்டும் என்ற போது கலை வெடித்தான்.
கம்பெனிக்கு வந்தும் நல்ல மூடில் இல்லை. ' என்ன கலை ரொம்ப அப்செட் ஆகிருக்கீங்க . ரிலாக்ஸ்' என்றேன்.
' வாணி! நாம என்ன பணம் பண்ணும் எந்திரமா? 'பணம்!' இதற்கு கொடுத்த முக்கியம் நம் வாழ்க்கைக்கு இல்லையா? வெறுத்துப் போச்சு. உங்க வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். என்னால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை.
' கலை! நீ உங்க அம்மா , அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம்' என்றாள் வாணி.
'இல்லை வாணி! இன்னைக்கு ரொம்ப பேசிட்டேன்' என்றான்.
' சரி கலை வேலையை பாரு யோசிக்கலாம்.' என்றேன்
மதிய உணவுக்காக அவன் கேபின்னுக்குச் சென்ற போது கலை தலை கவிழ்ந்த படி இருந்தான். அவனை தொட்டு எழுப்பிய போது வாயில் நுரை தள்ளியிருந்தது.
சப்த நாடியும் நடுங்க கூச்சல் போட்டு பலர் உதவியுடன் இங்கே இருக்கிறேன்.
என் கலை ஏன் இப்படி செய்தான்? எந்த சூழ்நிலையிலும் அவனோடு துணையிருப்பேன் என்ற நம்பிக்கை இல்லையா? அவனில்லாமல் தனியாக.... நினைக்கவே முடியவில்லையடா...கண்களில் தேங்கி இருந்த விழி நீர் அத்தனையும் கொட்டி முடிந்தது.
கலை கண் விழித்திருக்கிறான் செய்தி தேனாய் காதில் பாய, அம்பென பாய்ந்தேன். ' அம்மா , டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டுப் போங்க' என்றார் நர்ஸ்.
நான்கு நாட்களுக்குப் பின் தனியறைக்கு வந்தான். நல்ல தெளிவோடிருந்த கலையை இரண்டு அடி வைத்தேன். 'போடா..கோழை' என்றேன். அவன் என் கைகளைப் பிடித்தபடி என்னை பார்த்தவன் ' நீயில்லாவிட்டால் நான் கோழை தான் வாணி'.
உள்ளே வந்த நண்பர்கள் ' டேய் என்னடா மாப்பிள்ளை ? கல்யாண ஏற்பாட்டை நாங்க பாத்துகிறோம். சீக்கிரம் வந்து சேருடா.' ' என்னம்மா வாணி சந்தோசமா? அவனை நல்லா பாத்துக்கோ. என்னடா மச்சான் வரட்டுமா??? என்றார்கள் அவனுடைய தவறுகளை சுட்டி காட்டாமல். நட்பின் இலக்கணம் இதுவன்றோ !!!!!!!!!
பிரிப்பாயோ நின் உயிரை !
'உயிர் என்பது உன்னுடையதல்ல
நீ நினைத்தவுடன் பிரிப்பதற்கு,
மரணம் உன்னைத் தீண்டாதபோது
புதுத்துளிராய் உயிர் மீண்டது,
வாழ்க்கையென்பது வலிமை மிக்கது
அதனை முடிக்க நினைப்பது கொடுமையானது,
வாழ்ந்த நாட்களை யோசித்துப் பார்
வரும் நாட்களை நேசிக்கப் பார்,
வாழவும் வாழ வைக்கவும் பிறந்தவனே
சிரிக்கவும், சிறக்கவும் சிறந்தவனே,
விடியுமென்று விண்ணை நம்பிய நீ
முடியும் என்று உன்னை நம்பாததேன் ???'
என்றும் அன்புடன்
புஷ்பம் அமல்ராஜ்
Again one of the best story and kavithai. Every time with the great story, this blog is getting better with a message of confidence and revival of human spirits.
ReplyDeletePlease keep writing, all of us are waiting ....
this time நட்பு+காதல்...
ReplyDeletenice story lines..
poem too givin boost up.....
"உயிர் என்பது உன்னுடையதல்ல
நீ நினைத்தவுடன் பிரிப்பதற்கு"
yes...true lines..maa