Pages

Tuesday, 15 February 2011

காடெல்லாம் பூத்திருக்கு (3) !

அன்பும் நட்பும் துளிர்க்குமிடத்தில் சாதி சமயம் மாய்ந்தேபோம்!!!!!!! 
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )

     வீடு ஒரே கலகலப்பாக இருந்தது. இன்று எங்களின் 40 வது திருமண நாள். பேரன்கள், மகன், மகள் , மருமக்கள் நெருங்கிய  சொந்தங்கள் இணைந்தால் பேச்சு , அரட்டை, பாட்டு என ஒரே கலகலப்பு. நான் மட்டும் மாடியில் ஏதோ எண்ணங்களுடன் தனிமையை நாடினேன். காலக் குதிரையின் கடிவாளத்தை இழுத்து 45 ஆண்டுகளுக்கு முன்னோக்கி சென்றேன். 

    " என்னப்பா சிதம்பரம், வா வா " என வரவேற்ற அப்பாவின் குரல் கேட்டு ஓடி வந்த நான், ' வாங்கப்பா!' என சித்தப்பாவை வரவேற்றேன்.

   " இல்லண்ணே........ மதுரைக்கு போரேன்னு சொன்னேன். பெரியவரு, ' அப்ப நீ போயி பங்குனி உத்ரத்துக்கு பிள்ளைகளையும் கூட்டிட்டு வா' ன்னாரு , அதான் தங்கச்சிய கூட்டிட்டு போகலாமுன்னு வந்தேன்" என்றார். 

     "சித்தப்பா !  மொளகாச்சாமி மடத்திலே தண்ணிப் பந்தலா?"   என்றேன். " அம்மா, சித்தப்பாவுக்கு சாப்பாடு போடும்மா " என்றார் அப்பா. 

    " இந்தாம்மா இத எடுத்து வை" என ஒரு சாக்குப் பையை என்கிட்டே குடுத்தாங்க. உள்ளே அரிசி, மிளகாய், புளி சாமான்கள். ஊரிலிருந்து யார் வந்தாலும் சுமக்குமளவு பையோடு தான் வருவார்கள். ஊரில் சிதம்பரப்பாவோடு சேர்த்து ஆறு சித்தப்பாக்கள். எல்லாருக்கும் நான் செல்லப்பிள்ளை. நாங்கள் புறப்பட்டோம். 
   
      ஊர் எல்லையை பஸ் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆவலுடன் வெளியில் எட்டிப் பார்கிறேன். பஸ் ஊருக்குள் புகுந்து செல்கிறது. மொளக்கிட்டுத் திண்ணையைத் தாண்டியது. 
    
     " அக்கா....." வந்த குரலுக்கு சொந்தக்காரி சுசீலா. " அம்மா... அக்கா வந்திருச்சி". ஊருக்கே கேட்டிருக்கும் அந்த சத்தம். கீழ இறங்குகிறேன். 

      "என்னப் பெத்த ஆத்தா வந்துட்டாங்க", அம்மா என்னை அனைத்துக் கூட்டி போகிறார்கள். 
      
      " புஷ்பாம்மா எப்படி இருக்கீங்க?, ஆருமுகப்பா, ' வயலுக்கா அப்பத்தா', ' என்ன கொளம்பு வச்சீங்க'. எதிர்ப்பட்டவர்கள் அனைவரிடமும் ஒரு வார்த்தை பேசி விட்டு அம்மாவின் அணைப்பிலிருந்து விலகாமல் போகிறேன்.
      
       'என்னத்தா, எப்படி இருக்கீங்க' வீட்டு பண்ணக்காரி கருப்பி குசலம் விசாரிக்க, ' கருப்பி .. ஓடு, புள்ள வந்துருக்கு, ஒரு கொல நொங்கு சீவிட்டு வரச்சொல்லு' என அம்மா விரட்ட அவள் போகிறாள். அம்மா என்னை மடியில் படுக்க வைத்துக் கொள்கிறது. நானும் எழுந்திருக்கவில்லை. தாயற்ற எனக்கு அந்த அணைப்பும் சுகமும் தேவைப்பட்டது. 

                                 " ஏம்மா எப்படி படிக்கிறாங்க"
                                 "நல்லா படிக்கிரேன்ம்மா"

       " என்னம்மா எப்ப வந்த .... இப்பத்தான் தம்பி சொன்னான். கடையை பூட்டிகிட்டு வாரேன். இந்தா சில்லுனு இதைக் குடிம்மா! ஆதிமூலப்பா கொடுத்த ' கூல் டிரிங்கை' நானும் சுசிலாவும் குடித்தோம்.  

       " ஏன் மாமா, நாங்க கேட்டா குடுப்பீங்களா .... மக வந்தவுடனே ஓடி வந்துடீங்களே" தலையை ஒரு வெட்டு வெட்டிகிட்டு வள்ளியம்மா கூற, ஒரே கலகலப்பு. மொளகாச்சாமி மடத்துத் தண்ணிப் பந்தல் பானகமும் நீர் மோரும் கலந்ததை நான் எல்லாருக்கும் கொடுக்கிறேன். 

       " மதுர ஆத்தா, எப்ப வந்தீக நல்ல இருக்கீங்களா" எனக்கேட்டுச் சென்றனர். இரண்டு மூன்று நாட்கள் அன்பின் பேய் மழையில் நனைந்த நான் இன்று ஊருக்குக் கிளம்புகிறேன். பதினோரு மணிக்கு பஸ். காலையிலேயே சுசீலா எல்லா சித்தப்பா வீட்டுக்கும் சென்று' அக்கா ஊருக்குப் போறாக. நீங்க குடுக்கறதெல்லாம் சிதம்பரப்பா வீட்டுல குடுங்க' என் முரசு கொட்டி வருகிறாள்.. எல்லாருக்கும் அவங்க வீட்டுல இருக்கிறத கொடுக்க, கோளம்மா வகைபடுத்தி மூட்டை கட்டுறாங்க, பஸ் வந்து விட்டது.  

    " அம்மா போயிட்டு வரேம்மா , சுசீலா வரட்டா, சித்தப்பா நேத்தெல்லாம் காச்சலா இருந்தீங்க, மருந்து சாப்புடுன்கப்பா". கண்களில் எனக்கும் அவர்களுக்கும் நீர் கோர்க்க பஸ் புறப்பட்டது. 

     அத்தை தன் மகனுக்கு என்னைப் பெண் கேட்க, அப்பா சித்தப்பாகளிடம் சென்று சேதி சொல்லி, ' என்னால் எப்படிப்பா இந்த கல்யாணத்தை நடத்த முடியும்' என பணக்குறையை மனக்குறையாய் வெளியிட, " அட , நீ என்னப்பா .... நாங்க ஆறு பேரு இருக்கோம். ' ஆளுக்கு ஒன்னா' எடுத்து செஞ்சா கலியாணம் ஜாம் ஜாமுன்னு நடக்க போகுது' என பெரியப்பா அழுத்தமாகக் கூற, திருமணம் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. 

    " அம்மா , ரொம்ப நல்ல இருப்பம்மா" என்ற சித்தப்பாக்களின் வாக்கும் ஆசியும் இன்று வரை எங்களை சிறப்பாக வாழ வைத்திருகிறது. 

       நாற்பது வருடங்கள் ஓடி மறைந்து விட்ட இன்று அப்பாக்களை, அம்மாக்களை அவர்கள் சார்ந்த அனைத்தையும் நினைவு கூர்கிறேன். நான் அவர்கள் அனைவரையும் நினைக்கிறேன். அவர்களும் என்னை நிச்சயம் நினைப்பார்கள். நீண்ட தூர இடைவெளிகளுக்கு அப்பாலும் நாங்கள் நினைக்கிறோம். 

      நானும் அவர்களும் யார்? இரண்டும் தலைமுறைகளுக்கு முன் நட்பை பழகிய தாத்தாக்கள் இன்று சொந்தமாகியது எப்படி? பங்குனி உத்தரதுக்கும், தீபாவளிக்கும் , பகவதி பூஜைக்கும் அழைத்த அவர்கள் ஞ்யாற்று  கிழமையானால் " டேய், ராசேந்திரா அக்காவை ' பூசைக்கு' கூட்டிட்டு போயிட்டு பத்திரமா கூட்டிகிட்டு வாடா " என தேவாலயத்துக்கும் என்னை அனுப்ப மறப்பதில்லை. ஆமாம் நாங்கள் கிருத்தவர்கள்தாம். எங்கள் உறவு மதத்திற்கும் அப்பாற்பட்டது. வறுமை எங்களை இறுக அனைத்து கொண்டு உடும்புப் பிடியாக இருந்த வேளைகளில்தான் மூட்டைகளில் சாமான்களைக் கட்டி கொடுத்து வறுமைப் பிடியை தளர்த்தினார்கள். என்னை ஒரு நாளும் அவர்கள் ' மேரி ' என்று அழைத்ததில்லை. 'அம்மா ' , 'தங்கச்சி' , ஆத்தா' என்ற சொற்கள் மட்டுமே அவர்களிடம் இருந்து வந்தது. மேரியையும் , மாரியையும் பிரித்துப் பார்க்காததால் மதம் என்ற மதில் இடிந்து மனிதம் என்ற உறவில் ஒன்று பட்டோம். (பன்னீர் பூக்கள் மீண்டும் பூக்கும் )

8 comments:

  1. மேரியையும் , மாரியையும் பிரித்துப் பார்க்காததால் மதம் என்ற மதில் இடிந்து மனிதம் என்ற உறவில் ஒன்று பட்டோம்..........nice lines.....

    ReplyDelete
  2. babu i appreciate your hardwork ..........................expect a nice story soon folks!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. a wonderful example for integration.............

    ReplyDelete
  4. Very nice article about family unity and joy.
    Enjoyed reading

    ReplyDelete