Pages

Thursday, 7 July 2011

காடெல்லாம் பூத்திருக்கு (11) !

பூத்த மரமெல்லாம் கனி தருமா?
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )


     கேரளாவிலுள்ள வயநாடு இயற்கை எழில் கொஞ்சும் மலை நாடு. சுற்றமெல்லாம் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடி மகிழச் சென்றோம். எங்களது பேருந்து வளைந்து செல்லும் வளைவிலும், நெளிவிலும் சங்கடத்தோடு கடந்து சென்றது. எங்கு நோக்கினாலும் பசுமை, தேயிலைத் தோட்டம் மலை பாறைகளில் அட்டையாய் ஒட்டிக் கொண்டு அழகாய் காட்சித் தந்தது. 

     வலப்புறம்  ஓங்கி வளர்ந்த மலை முகடு. இடப்புறம் பார்த்தால் அதல பாதாளம், அங்கும் ஓங்கி வளர்ந்த பாக்கும் கழுகும் போட்டி போட்டு விண்ணைத் தொட முயல்கின்றன. அத்தனை மரங்களையும் அங்கே போய் பயிரிட்டவன் யார்? வியப்பு மேலிட கண்களை உயர்த்தினால் மேகக் கூட்டம் பள்ளத்தில் தங்கி விட்டு பரிதியை வரவேற்க மேலே பறந்து செல்வதே போல் பஞ்சுப் பொதிகளாய் தவழ்ந்து செல்கிறது. வண்டி நிற்கிறது. எங்களுக்கு துணையாய் வந்த பையன் இறங்கினான். எட்டிப் பார்த்த போது ஆங்காங்கே சின்னச் சின்ன வீடுகள் தென்பட்டன. 

     ஒரு வீட்டின் வாயில் நின்றவன் " சேச்சி, இருபது பேருக்கு சாப்பாடு ரெடி பண்ணு. அருவிக்கு சென்று வரும்போது சாப்டனும். எல்லாம் தமிழ் ஆளுங்க" என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னான். ' ஒன்னாந்தரத்தில் மீன் கூட்டும் வேணும்' என்றான்.  " சரி ரெடி ஆகும் , நீ போய் வா" என்ற பதில் மட்டும் கேட்டது. உருவத்தைக் காணோம். மறுபடி பயணம் பிள்ளைகளின் ஆட்டம், பாட்டத்தில் அந்த அமைதிப் பகுதியே ஆட்டம் கண்டது. 

     ஒருவழியாக ஆழமான பாதைகளையும், வழுக்கலான பாறைகளையும் கடந்து ' ஒ ' வெனக் கொட்டிய அருவியில் ' ஆ' வென வாய் பிளந்து கத்தி ஆடிக் குளித்து கரையேறி, பேருந்தைத் தேடிபிடித்து கை, கால் நடுங்க ஏறியமர்ந்து கண் மூடி அமைதி காத்த சற்று நேரத்தில் இறங்குங்க சாப்டலாம்' என்ற குரல் பசி வேலையில் தேனாய் ஒலித்தது. இறங்கிய எங்களை " வாங்க, வாங்க, அதோ. . . அங்கே தண்ணி கை கழுவ" என்ற குரலில் மலையாள வாடையே இல்லை. தமிழ் இனிமையாய் ஒலித்தது. 

     " இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சி? என்றதற்குள் " முப்பத்தைந்து வருஷம் ஆச்சு. வாழ்க்கையே மாறிப்போச்சு " என்றவரிடம் " இத்தனை வருஷம் ஆனாலும் தமிழ் மறக்கலியே?" என்ற போது "எப்படி மறக்கும்? தாயும் தாய் மொழியும் மறக்குமா?" என்றவளை பெருமையுடன் நோக்கும் போதே வெளிநாடு சென்ற இரண்டே ஆண்டில் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி தாய் நாட்டின் எந்தப் பண்பும் இல்லாதது போல் நடிக்கும் சிலரை எண்ணும் போது கசக்கிறது. சுவை மிக்க மீன் குழம்பும், கப்பக்கிழங்கும் கூட்டும் பசி வேலைக்கு தேவாமிர்தமாய் இருந்தது. பிள்ளைகள் சாப்பிட்டு கயிற்று ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தனர். நாங்கள் அந்த அம்மாவிடம் பேச்சுக்  கொடுத்தோம். 

     "இருபது வயதில் வேலை பார்த்த இடத்தில் மலையாளப் பையனுடன் நட்பில் ஆரம்பித்த பழக்கம் அவனில்லாமல்  நானில்லை என்ற நிலைஎத்திய நேரம் வீட்டில் கல்யாணத்திற்கு வரன் பார்க்க, அவர்கள் எண்ணத்திலும், கண்ணிலும் மண்ணை தூவி விட்டு நகையெல்லாம் எடுத்துக் கொண்டு பயமும், அவனுடன் செல்கிறேன் என்ற துணிவும் கொண்டு ரயில் பின் லாரி என மாறி மாறி பயணித்து மலைகளையும் , பள்ளங்களையும் கடந்து இரவு நேரம் குளிரில் நடுங்கியபடி இந்தக் குடிசையும் முன் இறங்கினோம். 

     கண்களைச் சுருக்கியபடிய வயதானவர் வெளியில் வந்து எங்களைப் பார்த்து ' யார் இவள்?' என எண்ணப் பார்த்து கேட்க, பக்கத்தில் சென்று இவர் ஏதோ சொல்ல, உரக்க சத்தம் இட்டபடி ஒரு கொம்பை டுத்து இவரை மாறி மாறி அடிக்க அச்சத்தில் அப்படியே சிலையாகினேன். அன்று இரவு அழுகையிலும், அசதியிலுமாக கழிந்தது. 

     பொழுது விடிந்ததும் என் வளையல்களில் நான்கை எடுத்துக் கொண்டு வேலை விசயமாகப் போய் வருவதாகக் கூறி சென்றவர் தான் வருசமும் ஓடிபோச்சு, அவர் சென்ற பிறகு மலையாளத்தில் அவரைப் பற்றி சொன்ன கதைகள் என்னை நிலைகுலையச் செய்தது. முன்பு ஒருமுறை இதே போல் ஒரு பெண்ணுடன் வந்து அவளது நகையை வாங்கிக் கொண்டு போனவன் வரவே இல்லை. அவளது அழுகையைக் காண சகிக்காமல் அவளை ஊருக்கு வண்டியேற்றி விட்டேன். இப்போது கூட நீயும் போவதை இருந்தாள் அனுப்பி விடுகிறேன் என்றவரிடம், ' வேண்டாம், வாசற்படி தாண்டி வந்து விட்டேன். மறுபடி போய் என் தாய் தகப்பனுக்கு பாரமாக இருக்கா மாட்டேன். எது வந்தாலும் இங்கேயே தங்கி விடுகிறேன்" என அழுத்தத்தைப் பார்த்து ' நான் இருக்கும் வரை உன்னைப் பார்த்து கொள்கிறேன்' என ஆறுதலாய் பேசினார். 

    அவர் தான் எனக்குப் பிறகு ' நீ பிழைக்க சாப்பாட்டுக் கடை ஆரம்பி ' என இந்த கடையை தொடங்கிக் கொடுத்தார். ஒரு வருஷம் கழித்து தமிழ் நாட்டிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் விட்டுச் சென்ற செய்திதாளில் என் அப்பாவின் புகைப்படமும், காலமானார்  என்ற அறிவிப்பும் கண்டு துடித்துப் போனேன். எத்தனை செல்லமாக வளர்த்தார்கள். எப்படி நம்பினார்கள். எல்லாவற்றையும் மறந்து, இளமை மயக்கம் என்னை ஏமாற்றி விட்டது. பல்லியைக் கண்டால் கூட பயந்து அலறும் நான் இன்று பாம்புகள் உலாவும் காட்டில் வாழ்கிறேன். விதி என்று சொல்லி என் தவறுகளை நியாயபடுத்த மாட்டேன். நான் ஓவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்புக் கேட்கிறேன். யாரும் மன்னித்தேன் என சொல்லவில்லை. ஆகவே, இது தான் தண்டனை" என்று அவரே தீர்ப்பையும் வழங்கியதைப் பார்த்து ஒரு பிரளயமே வந்து அடங்கியது போன்ற மனநிலைக்கு தள்ளப் பட்டோம். 

     எங்களுடன் வந்த இளம் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாகவும், வாழ்வின் தெளிவை உணர்ந்து கொள்ள வாய்ப்பாகவும் அந்த அம்மாவின் அனுபவம் அவர்களுக்கு உணர்த்தியது. 

     எத்தனயோ கதைகளிலும், படங்களிலும் பார்த்திருந்தாலும் அனுபவித்தவர்களே நெஞ்சுருக சொன்ன வார்த்தைகள் இளம் மனதில் பசு மரத்தாணி என பதிந்த போயிருக்கும். 

    ஓட்டுனர் வந்து, " நேரமாகி விட்டது, இப்போதே புறப்பட்டால் தான் இருட்டும் முன்பு போய் சேர முடியும்" என்றவுடன் புறப்பட தயாரானோம். 


    ஏதோ ஒரு சொந்தத்தை நடு வழியில் விட்டுச் செல்வது போன்ற உணர்வு எங்களுக்கும், தன மனபாரத்தை இறக்கிவிட்டோம் என்ற நிம்மதி அந்த அம்மாவுக்கும் ஏற்பட்டது. 

     மறுபடி பயணம் ! அதே மழைப் பாதை வளைவுகள், பள்ளங்கள் எல்லாம் வந்தன. இவைகளை ரசிக்கும் மனநிலை மாறி இயற்கையின் படைப்புகள் அனைத்தும் நியதிபடியும் நியமங்களின் படியும் கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நடந்து வருகின்றதே!

         மனிதன் மட்டும் இருபது ஆண்டுகள் ஆனவுடன் சுயநலத்திலும்,  சுய நாட்டதிலும் மட்டுமே பற்று கொண்டு , தானும் கெட்டு, மற்றவர்  மனதையும் கெடுத்து வாழ்கிறானே? என்றொரு ஏக்கம் மனதில் தோன்றாமல் இல்லை. 

     நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இறங்கி என் அறையில் புத்தகத்தை புரட்டினேன். நான் கண்ட வரிகள்......

     இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே! இளமை நாளில் மனம் விரும்புவதைச் செய்யுங்கள். அனால் , நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பை இறைவன் வழங்குவார். குழந்தைப் பருவமும், இளமைபருவமும் மறை கூடியவை. ஆகவே , எக்காரியமாயினும் சிந்தித்து , பின்னுள்ள காரியங்களின் பலன்களைச் சீர்த்தூக்கிச்  செயல்படுதலே சிறப்பாக முடியும் ' - என் மனநிலைக்கு ஏற்ற வரிகளாகவே பட்டது. 




    சொல்லடி பைங்கிளியே!!!

இளமைகால துள்ளல்கள்
எண்ணிலடங்கா குறும்புகள்
நண்பர் கூட்ட கலக்கல்கள் 
                                                     எல்லாம் இனிய நினைவுகள்

பசுமை நிறைந்த மரங்களும்
பழுத்த இலையை உதிர்ந்திடும் 
பாடும் குயில் கூட தன்
பாடல் வரியை மறந்திடும் 

வெள்ளத்தில் விரைந்தோடும் 
வைக்கோல் போன்றது 
நிலமிசை வாழ் நாள் 
என்பதை உணர்ந்திட்டால் 
வாலிபத்தின் தவறுகளை  
தவிர்த்திடலாம்  தடுத்திடலாம் 

காய்க்கும் முன்னே கனி 
வேண்டிவெம்பிய பழத்தை
தின்றிடவோ ? 
ஒளிக்கு காத்திருந்து 
இருளை காணல் நலம் தானோ?
சொல்லடி பைங்கிளியே ??? 
                                                                                            என்றும் அன்புடன்                                                                                        
                                                                                            புஷ்பம் அமல்ராஜ்  

4 comments:

  1. very nice lines..especially this line விதி என்று சொல்லி என் தவறுகளை நியாயபடுத்த மாட்டேன் ma.

    ReplyDelete
  2. nice story and poem....
    குழந்தைப் பருவமும், இளமைபருவமும் மறைய கூடியவை. ஆகவே , எக்காரியமாயினும் சிந்தித்து , பின்னுள்ள காரியங்களின் பலன்களைச் சீர்த்தூக்கிச் செயல்படுதலே சிறப்பாக முடியும'

    ReplyDelete
  3. thankz for ur comments guys,,,i really appreciate ur involvement to the story,,,

    நீங்கள் குறிப்பிட்ட வரிகள் உங்களை மிகவும் பாதித்துள்ளது என்பது தெரிகிறது ,,,,,கதையை ஆழ்ந்து படித்த வாசகர்களுக்கு நன்றியும் பாராட்டும்
    pushpam amalraj

    ReplyDelete
  4. Very nice story. Genuine, simple and heart touching stories and kavithai's.

    ReplyDelete