Pages

Friday, 10 May 2013

காடெல்லாம் பூத்திருக்கு !!!





அன்புள்ள வாசகர்களே.. 

            40 வருடத்திற்கு பிறகு தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த தன் சொந்த கிராமத்திற்கு சென்று, அனைத்து உற்றார் உறவினர்கள் நண்பர்களை சந்தித்து விருந்து ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பொழுதே தன் இன்னுயிரை ஈத்த இந்த கதைகளுக்கு சொந்தக்காரரான எங்கள் அம்மா திருமதி. புஷ்பம் அமல்ராஜ் அவர்களுக்கு எங்கள் அஞ்சலியை செலுத்துகிறோம்.

          வாசகர்களே, அவர் எழுதி வைத்திருக்கும்  மீதமுள்ள காடெல்லாம் பூத்திருக்கு தொகுப்புகளை அதி விரைவில் வழங்குகிறேன். அவர்களுக்காக நீங்கள் உங்கள் இதயத்தில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். 

அன்புள்ள மகன்.

Friday, 5 April 2013

காடெல்லாம் பூத்திருக்கு (36)


           அழகாய் மெழுகி கோலமிட்ட திண்ணையில் காலை மடித்து உட்க்கார்ந்து சரண்யா பூ தொடுக்கும் அழகே அழகு. அவளை பார்த்தவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரமாய் மறக்க மாட்டார்கள். காரணம், அவளது முக அழகு மட்டுமல்ல, கருகருவென அடர்த்தியாய் நீளமாய் தொங்கும் அவளது பின்னாலும் தான். எத்தனையோ விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வருகிறது ஆனால் அவள் எந்த எண்ணெய் தேய்த்து எப்படி பட்ட சேம்புவில் குளிக்கிறாள்? அந்த ரகசியத்தை கேட்டால் சில்லறை காசு கொட்டியது போல கலகலவென சிரிப்பாள். பதில் மட்டும் வார்த்தைகளில் வராது அவளது வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் மல்லிகைக்குக் கூட எப்படி இப்படியொரு வாசம். நாலு பூவை தலையில் வைத்துக் கொண்டு நடந்தாலே எல்லார் தலையும் ஒரு முறை திரும்பிப் பார்க்கும்.


விதியின் அணைப்பில்.....
( புஷ்பம் அமல்ராஜ்  - 044 25730952 / 9941459848 )




           அப்பா, அம்மா, சரண்யா. மிக சிறிய குட்டிக் குடும்பம் மூவரின் தேவைகளை  சமாளிக்கும் அளவு வருமானம் தரும் கண்ணியமான வேலை அப்பாவுக்கு. அம்மா கோதை தன வீட்டை பளிச்சென வைத்துகொள்ளும் பாங்கும், மகளையும், கணவனையும் குறையின்றி கவனித்துக் கொள்ளும் நேர்த்தியும் மற்ற பெண்களை கூட டிப்ஸ் கேட்க்க வைக்கும். மகளின் தலைக்கு தான் தயாரிக்கும்எண்ணெய் தான் இத்தனை நீண்ட அடர்ந்த அழகு கூந்தல் ரகசியம் என அவளே பாராட்டிக் கொள்வாள்.

           சரண்யா சாது, படிப்பில் புலி என்றெல்லாம் கூற முடியா விட்டாலும் வம்பு சண்டைக்கு போக மாட்டாள். அரட்டை கிண்டல் என தன் தோழிகளுடன் சேர்ந்து விட்டால் யாரையும் விடவும் மாட்டாள். ஆக கலகலப்பான அழகான குடும்பம். தோழிகள் வீட்டுக்கு வந்து விட்டால் அம்மா செய்து கொடுக்கும் பலகாரத்தின் ருசியும், தோழிகளுடனான அரட்டையும் நேரம் போவதே தெரியாது. ஆக மொத்தம் கல்லூரி கலாட்டா கும்பலில் இவளும் ஒருத்தி. 

           எல்லோரோடும் நன்றாக பேசுவாள் ஆனால் யாரோடும் நெருங்கி பழக மாட்டாள்.  கல்லூரி ஆண்டுவிழாவில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் பரிசு தனக்கே வருமென நம்பிக் கொண்டிருக்க அறிவிப்பு வெளியான போது அருண் வெற்றிபெற்றதாக சொன்னார்கள். அறிவிப்பு வெளியானபோது சரண்யாவுக்கு மனதுக்கு சற்று கஷ்டமாக தான் இருந்தது. என்றாலும் அவனும் நன்றாகத் தானே பாடினான் என்று எண்ணிய போது சரி பரவாயில்லை என வந்துகொண்டிருந்த போது "சரண் ஒரு நிமிஷம்" என்ற குரல் திரும்பிப்பார்க்க செய்தது. அருண் அங்கே நின்று கொண்டிருந்தான். "நீங்க ரொம்ப நல்லா பாடுனீங்க. பரிசு எனக்கென்று தெரிந்த போது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது" என்றவனிடம், "நீங்க ஏன் சாரி சொல்லுரிங்க?" என்றாள். "சரி வரட்டுமா?" என செல்ல தொடங்கியவளிடம் , "உங்களைப் பார்த்து நிறைய தடவை பேச எண்ணி இருக்கிறேன். ஆனால் அதற்க்கு வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது.  இந்த பரிசு தான் அந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளது. ஆகவே பரிசு தந்தவர்களுக்கு நன்றி" என்றான். "ஓ... அப்படியா ?, நானும் ஒரு முறை அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால் நானும் உங்களிடம் பேச முடிந்தது இல்லையா? சரி நான் வரட்டுமா குட் நைட் " என கூறி கொண்டு கிளம்பினாள். 

           அம்மாவும், அப்பாவும் திண்ணையில் அமர்ந்து எனக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்ததும் , " என்னம்மா எப்படி பாடினே?"- என்றார்கள். "இல்லப்பா ஜஸ்ட் மிஸ்" என்றாள் . "சரி விடும்மா . வா சாப்பிடலாம்" என்றார் அப்பா. அப்பா எப்போதுமே எதையும் ஈசியாய் எடுத்துக் கொள்வார். என்னைச் சிறுவயது முதலே நீ இதை இப்படி தான் செய்யணும் என கட்டாய படுத்தியதே இல்லை. என் எண்ணங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார். தவறு தான் என பட்டால் இதமாக எடுத்து சொல்வார். அவர் வார்த்தையில் எப்போதுமே எனக்குபெரிய மதிப்பு உண்டு. 

           கல்லூரியில் எப்போதுமே அருணை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருக்கும். அதிகம் அலட்டிக் கொள்ளாமலும் ஸ்மார்ட் ஆகவும் இருக்கும் அவனது இயல்பு அனைவருக்கும் பிடிக்கும். படிப்பில், கவனிப்பில், நோட்ஸ் எடுப்பதில் என அனைத்திலும் திறமையானவன். எனக்கும் அவனது பண்புகள் பிடித்து போகவே நல்ல நண்பர்கள் ஆனோம். ஒரு நாள் குளிக்கலாம் என தலையை விரித்து விட்டு அம்மாவிடம் என்னை தேய்த்துக் கொண்டிருக்கும் போது  அழைப்பு மணி ஒலிக்கவே திறந்து பார்த்த போது அங்கே அருண். ஆடி போய்விட்டேன் சற்று இடைவெளியில் கூடவே அப்பாவும் வந்தார். 'வாங்க' எனஅழைத்த போது , ' ஏங்க  இது உங்க வீடா?  சார் வரும்போது பைக் ஒன்று இடிக்கவே கீழ விழுந்தததில் மயங்கி விட்டார். மயக்கம் தெளிந்த போது  வீடு பக்கத்தில் தான் என்றார். அதனால் தான் அவரை அழைத்துக் கொண்டு வந்தேன் " என்று கூறி அப்பாவையும் சோபாவில் அமர செய்தார். "தம்பி உக்காருப்பா' என அப்பா சொல்லவே அமர்ந்தார். அம்மா பதறி போய் இருந்தார். இப்போது அருண் எங்கள் குடும்பத்தின் ஒரு நல்ல நண்பர். அடுத்த நாள் என்னை கல்லூரியில் பார்த்த போது, ' ஏங்க அது உங்க வீடுன்னே தெரியாதுங்க. உங்களை பார்த்ததும் நானே அசந்து போயிட்டேன். நிறைய தடவை உங்களின் பின்னல் நீளத்தை பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் உங்கள் வீட்டில் விரித்து போட்டிருந்த கூந்தலை பார்த்தவுடன் நான் உங்க பின்னால் ஒளிந்து கொண்டிருந்தால்  கூட யாருக்கும் தெரியாது போல. அத்தனை அடர்த்தி உங்க கூந்தல்" என்றான். 'அடடே என்னங்க இவ்வளவு கூந்தல் பு ராணம் பாடுறிங்க?" என நானும் செல்லமாக கடிந்து கொண்டேன் . நாட்கள் அழகாய் நகர்ந்ததை நானும், அருணும் உணர்ந்தோம். 

           சில வேளை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்போம் ஆனால் நிறைய விஷயங்கள் பேசியது போன்ற உணர்வுகள். அருண் பேசும்போது நான் அவன் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பேன்.  அந்த கண்களில் மட்டும் அப்படி ஒரு ஒளி . என் சிநேகிதி ஒருத்தி எப்போதும் கூறுவது 'பளிச்சென்ற கண்களும் , உதட்டோரம் புன்னகையும் கொண்டு பேசுபவர்கள் யாராய் இருந்தாலும், அடுத்தவரை வசீகரிக்கும் பண்பு கொண்டவர்களாக தான் இருப்பார்கள் ;என்பாள் . அதனை உண்மை என உணர்ந்தேன்.எங்களின் நட்பு நாங்கள் ஒருவரையொருவர் பிரிய முடியாத நிலைக்கு எங்களை மாற்றியது. எதிர்கால கனவுகள்  ,மனதில் விரிய தொடங்கியது என்றாலும் படிப்பில் கவனமாகத்தான் இருப்போம். எங்கள் கல்லூரி வட்டாரத்தில் எங்களை பற்றி நிறைய கதைகள் உலா வர தொடங்கியது. 

           எங்களை போலவே பலரையும்  இணைத்து தாளம் போட  வைக்கும் மெரினா. எங்களையும் ஈர்த்தது. கைகளை சேர்த்தபடி கடலுக்குள் நடந்தோம். இருவரும் பேசவில்லை. கைகளின் ஸ்பரிசம் எங்களை எங்கோ அழைத்து சென்றது. வேகமாக வந்த அலை அருணை தடுமாற செய்யவே கீழே விழுந்தவன் உருண்டான். அலைகளின் ஆர்பாட்டத்தில் அவனது குரல் கரைந்தது. என்னை எட்டி பிடிக்க நினைத்து கைகளை நீட்டிய போது என் நீளமான சடை அவன் கையில் சிக்கியது. நானும் அலையின் அணைப்பில் விழுந்தேன். என் பின்னலின் பிடியில் என்னை அவன் இழுக்க நான் அவன் மேல் சாய்ந்தேன். நாங்கள் எங்கே போகிறோம்? கண்கள் இருள தொடங்கியது. பின்னலால் தன்னை இறுக்கிய  அருணை அணைத்த படி நானும் அவனும் மறுநாள்  மணல் திட்டில். விதி என்பது இது தானோ? 



விதியின் பிடியில் .....


அழகே மனித உருவை 
எப்படியெல்லாம் அலங்கரிக்கிறாய் 
நிறமாய் நீண்ட நாசியாய் 
புன்னகையின் பூரிப்பாய் 
மெல்ல நடக்கும் நடையாய் 
முக அமைப்பாய் 
நீண்டு வளர்ந்த கூந்தலாய் என 
உன்னை ஆராதிக்கும் 
மனங்களுக்கு 
என்ன சொல்ல போகிறாய்? 
கார்மேக கூந்தல் என்றால் 
வியக்காதோர் யாருண்டு?
மனதை பறிகொடுத்தோர் எத்தனை பேர் 
ஆனால் அக்கூந்தலே 
எமனானால் ?
யார் உன்னை போற்றுவார்?
அவன் வியந்ததும் 
யாசித்ததும் 
அவனுக்கே பகையாமோ?

   என்றும் அன்புடன்
                                                                                               புஷ்பம் அமல்ராஜ்